திரவுபதியம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா

திரவுபதியம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா நடந்தது.

Update: 2022-06-14 19:43 GMT

கீழப்பழுவூர்:

தீமிதி திருவிழா

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரண்மனைக்குறிச்சி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, பட்டு உடுத்தி தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பஞ்சபாண்டவர்களின் சிலையை பக்தர்கள் தோளில் சுமந்து ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக கொண்டு சென்று தீமிதி திடலை அடைந்தனர்.

பின்னர் தீமிதி திடல் பற்ற வைக்கப்பட்டது. இதில் அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்ற 150-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி சுமந்து கொண்டும், அலகு குத்தியும், கரகம் ஏந்தியும், அவர்களது குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டும் ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக வலம் வந்து திடலில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திருமானூர், திருமழபாடி, பாளையபாடி, இலந்தைக்கூடம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நேர்த்திக்கடன் செலுத்தினர்

இதேபோல் உடையார்பாளையம் அருகே வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்தது. இதில் தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, அம்மன் பிறப்பு, திருக்கல்யாணம், குறவஞ்சி நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்று, அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.

இதில் ஏராளமான பத்தர்கள் விரதமிருந்து தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் உடையார்பாளையம், வாணதிரையன்பட்டினம், நாயகனைப்பிரியாள் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம நாட்டாமைகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்