வேலூரில் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை

வேலூரில் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. பேரணாம்பட்டில் மின்னல் தாக்கி தென்னை மரங்கள் தீப்பிடித்தது.

Update: 2022-06-05 17:20 GMT

வேலூர்

வேலூரில் நேற்று இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. பேரணாம்பட்டில் மின்னல் தாக்கி தென்னை மரங்கள் தீப்பிடித்தது.

ஆலங்கட்டி மழை

வேலூர் நகரில் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. தினமும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயிலின் அளவு பதிவாகி வருகிறது. காலை முதல் வழக்கம்போல் வெயில் வாட்டி வதைத்தது. மதிய வேளையில் அனல் காற்றும் வீசியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். 106.3 டிகிரி வெயில் பதிவானது. வாட்டி வதைக்கும் வெயிலுக்கு இதமாக மழை பெய்யாதா என்று பொதுமக்கள் எதிர்ப்பார்த்தனர்.

இந்த நிலையில் மாலை 6.30 மணியளவில் திடீரென பலத்த காற்று வீசியது. அதைத்தொடர்ந்து சிறிதுநேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. சிறிதுநேரம் மட்டுமே மழை வேகமாக பெய்தது. அதன்பின்னர் சாரல் வீசியது. வேலூர் வேலப்பாடி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.

இதனை கண்ட பொதுமக்கள் பலர் மகிழ்ச்சியுடன் அதனை கைகளில் எடுத்து விளையாடினார்கள். திடீரென பெய்த மழையினால் இருசக்கர வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றனர். ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

வேலூரில் சிறிதுநேரம் மட்டுமே பெய்த மழை பெய்ததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மாலை 5 மணியளவில் மழைபெய்யத் தொடங்கியது. தொடர்ந்து இரவு வரை இடி மின்னல், சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது.

பேரணாம்பட்டு அருகே உள்ள செண்டத்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே பட்டாபி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்த ஒரு தென்னை மரம், அருகில் உள்ள மாரி என்பவருக்கு சொந்தமான தென்னை மரம் ஆகியனவற்றின் மீது மின்னல் தாக்கியதில் 2 தென்னை மரங்கள் பற்றி எரிந்து சேத மடைந்தன. மழையினால் மின்சாரம் தடைப்பட்டது.

கே.வி.குப்பம்

கே.வி.குப்பத்தில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடனும், சுட்டெரிக்கும் வெயிலாலும் மாறிமாறி காணப்பட்டது. மாலை நேரத்திற்குப் பிறகு திடீர் என்று இடி, மின்னலுடன் மழை பெய்தது.

இது சுமார் 1 மணிநேரம்வரை நீடித்தது. தெருக்களிலும், சாலைகளிலும் தண்ணீர் ஆங்காங்கே தேங்கியது. இதனால் கோடையின் அனல், புழுக்கம் மறைந்து பூமி குளிர்ச்சி அடைந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்