வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது;
கீழ்வேளூர் அருகே எரவாஞ்சேரி ஊராட்சி கருணாவெளி மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜாமுருகன் மகன் கிருஷ்ணராஜ் (வயது 23). கீழ்வேளூர் அருகே ஆழியூர் ஊராட்சி பாமினி தெருவை சேர்ந்தவர் வீரக்குமார் மகன் நவீன் (19). நண்பர்களான இருவரும் கடந்த டிசம்பர் மாதம் 25-ந்தேதி இரவு கீழ்வேளூர் - ஓர்குடி சாலையில் உள்ள பூலாங்குடி பஸ் நிறுத்தம் அருகே மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நவீனை பட்டா கத்தியால் கிருஷ்ணராஜ் வெட்டிக்கொன்றார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் கிருஷ்ணராஜ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் சாராய கடத்தல் மற்றும் சாராயம் விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கிருஷ்ணராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், கலெக்டர் அருண் தம்புராஜூக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கிருஷ்ணராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி கீழ்வேளூர் போலீசார் நாகை மாவட்ட சிறையில் இருந்த கிருஷ்ணராஜை நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.