சிறுமியை பலாத்காரம் செய்த வடமாநில வாலிபர்கள் 3 பேர் போக்சோவில் கைது

சிறுமியை பலாத்காரம் செய்த வடமாநில வாலிபர்கள் 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-28 19:23 GMT

குன்னம்:

சிறுமி பலாத்காரம்

பெரம்பலூர் மாவட்டம் அருமடல் பிரிவு சாலையில் ஒரு தனியார் சிமெண்டு செங்கல் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டம் தஹீபானி லோட்வா பகுதியை சேர்ந்த சுக்தேவ்ராம் மகன் சுனில்ராம்(வயது 20), பலேக்குண்டா பகுதியை சேர்ந்த ஹமின்சென்சிங் மகன் காமேதஸ்வர்சிங்(19), தானாபால்கோட் பகுதியை சேர்ந்த லஷ்மன்நாகேசியா மகன் பெருநாகசியா(20) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் 3 பேரும், சென்னையில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து தங்கியிருந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் 3 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

தாக்குதல்

பின்னர் இது பற்றி அந்த சிறுமி, தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள், சுனில்ராம் உள்ளிட்ட 3 பேரையும் தாக்கியுள்ளனர். இதையறிந்த மருவத்தூர் போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

போக்சோவில் கைது

விசாரணையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்ததையடுத்து, அவரை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுனில்ராம், காமேதஸ்வர்சிங், பெருநாகசியா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராமேசுவரத்தில் பெண்ணை வடமாநில வாலிபர்கள் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவத்தின் பரபரப்பு அடங்காதநிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த வடமாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்