சொத்து வரி வசூலிப்பு விவகாரம்: நகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து பெண் அதிகாரிக்கு மிரட்டல் திண்டிவனத்தில் பரபரப்பு

சொத்து வரி வசூலிப்பு விவகாரத்தில் நகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து பெண் அதிகாரிக்கு மிரட்டல்விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-11-19 18:45 GMT


திண்டிவனம், 

திண்டிவனத்தில் மயிலம் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கான சொத்து வரி 1 லட்சத்து 39 ஆயிரத்து 832 ரூபாய் நகராட்சிக்கு செலுத்தப்படாமல் இருந்தது. இந்த வரிதொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிப்பதற்காக திண்டிவனம் நகராட்சி மேலாளர் சந்திரா தலைமையில் வருவாய் உதவியாளர்கள் மற்றும் அலுவலர்கள், அந்த மண்டபத்துக்கு சென்றனர். அப்போது, அங்கிருந்தவர்கள் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று, மேலாளர் சந்திரா அலுவலத்தில் இருந்த போது அங்கு 20-க்கும் மேற்பட்டவர்கள் வந்து அவரை திட்டி, ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சந்திரா மற்றும் அங்கிருந்த அலவலர்கள், அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமாராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் திண்டிவனம் போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் செய்தனர். அதன்பேரில் திருமண மண்டபத்தின் உரிமையாளர் மூர்த்தி, சங்கரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோன்று, திருமணமண்டபத்தின் தரப்பில் இருந்தும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதில், நகராட்சி மேலாளர் சந்திரா கையூட்டு கேட்டதாகவும், நகராட்சி அலுவலர்களை வைத்து மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளனர். அதன் பேரிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்