திருவையாறு புஷ்யமண்டப படித்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
திருவையாறு புஷ்யமண்டப படித்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
ஐப்பசி மாத கடைமுழுக்கையொட்டி திருவையாறு புஷ்யமண்டப படித்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
துலாம் மாதம்
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாத்திற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. ஐப்பசி மாதத்தை துலாம் மாதம் என்றும் அழைக்கின்றனனர். இந்த ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுதல் மிக சிறப்புடையதாகும். மக்கள் தாங்கள் செய்த பாவங்களை போக்குவதற்காக கங்கையில் சென்று நீராடி புனிதம் பெறுவர். 3½ கோடி தேவர்களும் காவிரியில் புனித நீராடி தனது பாவத்தை போக்கி கொள்வதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த துலாம் மாதத்தில் தினந்தோறும் நீராட முடியாவிட்டாலும், முதல்நாள் மற்றும் கடைசி நாள் நீராடினாலே புண்ணியப்பேறு அடைவார்கள் என்பது ஐதீகம்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
ஐப்பசி மாத கடைமுழுக்கையொட்டி நேற்று திருவையாறு புஷ்யமண்டபத்தெரு காவிரி ஆற்று படித்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். அதனை தொடர்ந்து தர்மசம்வர்த்தினி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் புஷ்யமண்டப படித்துறையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகைள திருவையாறு போலீசார் செய்திருந்தனர். ஐப்பசி கடைமுழுக்கையொட்டி திருவையாறு விழாக்கோலம் பூண்டது. முன்னதாக திருவையாறு கடைவீதியில் பொங்கல் கரும்புகளை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.