தனியார் பஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் சாலைமறியல்

தனியார் பஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் சாலைமறியல்

Update: 2023-01-22 19:13 GMT

அய்யம்பேட்டையில் தனியார் பஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பஸ் நிறுவனம்

அய்யம்பேட்டையை தலைமையிடமாக கொண்டு தனியார் பஸ் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான பஸ்கள் இயங்கி வந்தன. இந் நிறுவனத்தில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் முதலீடு செய்திருந்தனர். இதற்கிடையே கடந்த சில மாதங்ளுக்கு முன்பு இந்த பஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கமாலுதீன் இறந்துவிட்டார். இதையடுத்து பஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பலரும் தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்டனர்.

பணத்தை திருப்பிக்கொடுக்காத தனியார் பஸ் நிறுவனம் இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு தொடுத்ததாக தெரிகிறது. வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இது சம்பந்தமாக திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சில வாகனங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்த நிலையில் கமாலுதீன் உறவினர் இல்ல திருமண விழா அய்யம்பேட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. இதையறிந்த முதலீட்டாளர்கள் சக்கராப்பள்ளியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் முன்பு கூட இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து திருமணம் நடக்க இருந்த மண்டபம் முன்பும், கமாலுதீன் உறவினர்கள் வீடுகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பூரணி, ராஜ்மோகன், பாலாஜி, மோகன்தாஸ், ஜாபர் சித்திக் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட போலீசார் அய்யம்பேட்டை பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம்

மேலும் அய்யம்பேட்டைக்கு வரும் முக்கிய சாலைகள் சீல் வைக்கப்பட்டு போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இருப்பினும் பஸ்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் வந்த ஏராளமானோர் தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் சக்கராப்பள்ளி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் அருகே குவிந்தனர். அவர்களை போலீசார் வாகனங்களில் ஏற்ற முயன்றனர். அப்போது தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப கொடுக்காமல் தனியார் பஸ் நிறுவனம் ஏமாற்றுவதாக கூறி முதலீட்டாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம், அய்யம்பேட்டை, முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர் பண்டாரவாடை, நாச்சியார் கோவில், ஆவூர், பந்தநல்லூர், ஆடுதுறை, குடவாசல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். திருமணம் நடந்து கொண்டிருந்த மண்டப வாசலிலும் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர்.

சாலைமறியல்

இதையடுத்து அதிகாரிகள் முதலீட்டாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அய்யம்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அமைதி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துக்குமார், பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, வருவாய் ஆய்வாளர் ரெஜிலாதேவி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கோர்ட்டு வழிகாட்டுதல் படி, பொருளாதார குற்ற பிரிவு போலீசார் விரைந்து விசாரணை செய்து முதலீட்டாளர்களுக்கு உரிய தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று முதலீட்டாளர்களின் கோரிக்கைகளை குறிப்பெடுத்துக் கொண்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து முதலீட்டாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்