அரசாணை 149-ஐ நீக்க வலியுறுத்தி 'டெட்' தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம்

ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்கள் போட்டித்தேர்வு நடத்தாமல், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்வதை தடுக்கும் அரசாணை எண்.149-ஐ நீக்கக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.;

Update: 2023-11-23 21:42 GMT

சென்னை,

ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்கள் போட்டித்தேர்வு நடத்தாமல், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்வதை தடுக்கும் அரசாணை எண்.149-ஐ நீக்கக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் கடந்த மாதம் (அக்டோபர்) 31-ந்தேதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலும், டெட் தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையிலும், வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுத்து பணி நியமனம் செய்ய வலியுறுத்தினர். அதுபற்றி ஆலோசித்து முடிவெடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில், அரசாணை எண்.149-ஐ நீக்கக்கோரியும், பதிவு மூப்பு அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தியும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 300-க்கும் அதிகமானோர் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நேற்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக டெட் தேர்ச்சி பெற்றவர்கள் கைது செய்யப்பட்டு. சென்னை புதுப்பேட்டையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் நேற்று மாலை விடுவித்தனர். இருப்பினும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்