தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க வந்தவர்கள் ஏமாற்றம்

புதுக்கோட்டையில் கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். ஐகோர்ட்டு தடை உத்தரவால் பணிகள் நிறுத்தம் செய்யப் பட்டுள்ளது.

Update: 2022-07-04 18:50 GMT

தற்காலிக ஆசிரியர்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தற்காலிகமாக 13 ஆயிரத்து 331 ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியானது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் புதிதாக வெளியிடப்பட்டன.

மேலும் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் நியமன பணிக்கு விண்ணப்பிப்பதற்காக விண்ணப்பதாரர்கள் ஏராளமானோர் நேற்று அந்தந்த கல்வி மாவட்டத்திற்கு சென்றனர். புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு விண்ணப்பத்துடன் வந்தனர். ஆனால் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறப்படவில்லை. இதனால் விண்ணப்பிக்க வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

கோர்ட்டில் வழக்கு

விண்ணப்பம் பெறப்படாதது குறித்து அதிகாரிகளிடம் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க வந்தவர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அதிகாரிகள் பதில் அளிக்கையில், அரசு தெரிவித்துள்ள நடைமுறையில் புதுக்கோட்டை மாவட்டம் இடம்பெறவில்லை. மேலும் ஆசிரியர் நியமன பணி தொடர்பாக ஐகோர்ட்டில் ஒரு வழக்கு நடைபெறுகிறது.

அந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்டம் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதனால் நாங்கள் விண்ணப்ப படிவத்தை பெற முடியாது என்றனர்.

ஐகோர்ட்டு உத்தரவால் தடை

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும். பள்ளிகளில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் கூறினர். இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்திருப்பதால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் அது பொருந்தும் எனவும், அதனால் ஆசிரியர் நியமனத்திற்கு எந்தவிதமான பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் நேற்று மாலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு தடை உத்தரவு அமலில் இருப்பதால் விண்ணப்ப மனுக்கள் எதுவும் பெறப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்