கைப்பந்து போட்டியில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி வெற்றி

தூத்துக்குடியில் நடந்த அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கு இடையேயான கைப்பந்து, கடற்கரை கைப்பந்து போட்டிகளில் வ.உ.சிதம்பரனார் துறைமுக அணி கோப்பையை வென்றது.

Update: 2023-02-01 18:45 GMT

தூத்துக்குடியில் நடந்த அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கு இடையேயான கைப்பந்து, கடற்கரை கைப்பந்து போட்டிகளில் வ.உ.சிதம்பரனார் துறைமுக அணி கோப்பையை வென்றது.

கைப்பந்து போட்டி

அகில இந்திய துறைமுக விளையாட்டு கழகம் சார்பில் அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கு இடையேயான கைப்பந்து போட்டி, கடற்கரை கைப்பந்து போட்டி ஆகியவை வ.உ.சி. துறைமுக பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த போட்டியில் சென்னை, கொச்சி, மும்பை, கொல்கத்தா, நியூ மங்களூர், பாரதீப், விசாகப்பட்டினம், கோவா, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஆகிய 9 பெருந்துறைமுகங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகளை வ.உ.சி. துறைமுக ஆணைய துணைத்தலைவர் பிமல்குமார் ஜா தொடங்கி வைத்தார். தொடர்ந்து 3 நாட்கள் போட்டிகள் நடந்தன.

நேற்று முன்தினம் இறுதி போட்டிகள் நடந்தது. கடற்கரை கைப்பந்து இறுதி போட்டியில் துத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணியும், கொச்சி துறைமுக அணியும் விளையாடின. இதில் 21-13, 21-13 என்ற புள்ளிக்கணக்கில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்றது. கொல்கத்தா துறைமுக அணி 3-வது இடத்தை பிடித்தது. கைப்பந்து இறுதி போட்டியில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணியும், சென்னை துறைமுக அணியும் விளையாடின. இதில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி 25-12, 25-19, 25-13 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றத. பாரதீப் துறைமுக அணி 3-வது இடத்தை பிடித்தது.

பரிசளிப்பு விழா

வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி வ.உ.சி துறைமுக ஆணைய துணைத்தலைவர் பிமல்குமார் ஜா தலைமை தாங்கி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.

விழாவில் தலைமை எந்திர பொறியாளர் மற்றும் தலைவர் வி.சுரேஷ்பாபு வரவேற்று பேசினார். விழாவில் வ.உ.சி. துறைமுக ஆணைய துறை தலைவர்கள், மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் வ.உ.சி துறைமுக விளையாட்டு கழக செயலாளரரும், மேற்பார்வை பொறியாளருமான பி.செல்வராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்