தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழா நன்றி திருப்பலி.
தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழா நன்றி திருப்பலி நடந்தது.
தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழா நன்றி திருப்பலி போப் ஆண்டவரின் இந்திய-நேபாள தூதர் லெயோபோல்தோ ஜிரெல்லி தலைமையில் நடந்தது.
நூற்றாண்டு விழா
தூத்துக்குடி மறைமாவட்டம் கடந்த 1923-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி திருச்சி மறைமாவட்டத்தில் இருந்து பிரித்து தனி மறை மாவட்டமாக உருவாக்கப்பட்டது. தற்போது, இந்த மறைமாவட்டம் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் 119 பங்குகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த மறைமாவட்டம் உருவாக்கப்பட்டதன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மறைமாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி சின்னக்கோயில் வளாகத்தில் நுற்றாண்டு நிறைவு விழா வரவேற்பு நிகழ்ச்சியானது, சமய, சமூக, அரசியல் நல்லிணக்க விழாவாக நடந்தது.
திருப்பலி
தொடர்ந்து, நூற்றாண்டு விழா சிறப்பு நற்கருணை ஆராதனை மறை மாவட்ட துறவிகள் பேரவை சார்பில் நேற்று நடந்தது. மாலையில், நூற்றாண்டு நிறைவு விழா நன்றித் திருப்பலி நடந்தது. விழாவுக்கு போப் ஆண்டவரின் இந்திய-நேபாளத் தூதுவர் லெயோபோல்தோ ஜிரெல்லி தலைமை தாங்கினார். திருப்பலிக்கு, மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கினார். புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்ட பிஷப் பிரான்சிஸ் கலிஸ்ட் மறையுரையாற்றினார். மும்பை கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ், ஐதராபாத் கர்தினால் அந்தோனி பூலா, தமிழ்நாடு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மறைமாவட்ட குருக்கள், அருட்சகோதரிகள், தூத்துக்குடி மறை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இறைமக்கள் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் விக்டர், பிஷப் செயலாளர் அருள்தந்தை ரினோ, செய்தி தொடர்பாளர் ரெடிம்டர் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.