தர்மபுரியில் ஓம் சக்தி கோட்டை மாரியம்மன் கோவிலில் 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை
தர்மபுரி
தர்மபுரி நெல்லி நகர் ரெயில்வே நிலையம் மேற்கு புறம் உள்ள ஸ்ரீ ஓம் சக்தி கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி மகாலிங்கேஸ்வரர், சக்தி விநாயகர் பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவபெருமாள், ஆஞ்சநேயர், துர்க்கை அம்மன், காலபைரவர் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் சாமிகளுக்கு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மகாலிங்கேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு உபகார பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.