ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-07-03 16:08 GMT

தேவகோட்டை, 

தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா

தேவகோட்டை அருகே உள்ளது கண்டதேவி. இங்கு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனிதிருவிழா 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த விழா நடைபெறவில்லை.

இந்த ஆண்டிற்கான விழா நேற்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரம் அருகே சொர்ணமூர்த்தீஸ்வரர், பெரியநாயகி அம்மன், பிரியா விடையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து காலை 8.29 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது.

அதன் பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி தினந்தோறும் காலை, இரவு சாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

திருக்கல்யாணம்

விழாவின் 5-ம் திருநாளான வருகிற 7-ந் தேதி அன்று சாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவ விழா நடக்கிறது. தொடர்ந்து 9-ம் திருநாள் அன்று தேரோட்டம் நடக்கிறது. கொடியேற்ற விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக கொடியேற்று விழாவை யொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சிவக்குமார் (பொறுப்பு) மற்றும் ரமேஷ் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப் பட்டனர்.

திருவிழா தொடக்க நாள் அன்று பக்தர்கள் கூட்டத்தைவிட போலீசார் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விழா ஏற்பாடு களை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் சிவகங்கை சமஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்