திருவாண்டசாமி கோவில் திருவிழா

கள்ளிமந்தையம் அருகே திருவாண்டசாமி கோவிலில் திருவிழா நடந்தது.

Update: 2023-08-25 19:45 GMT

கள்ளிமந்தையம் அருகே திருவாண்டபுரத்தில் பிரசித்திபெற்ற திருவாண்டசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 2 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதில், சுவாமி சப்பர வீதிஉலா வரும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பார்கள். அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து குப்பாயிவலசு வள்ளிமான் கலைக்குழுவினரின் கொங்கு வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது.

இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீரை கொண்டு திருவாண்டசாமி மற்றும் விநாயகர், கருப்பணசாமி, வேட்டைக்காரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷகம் நடைபெற்றது. அதன்பிறகு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமிகள் அருள்பாலித்தனர். பின்னர் திருவாண்டசாமி சப்பரத்தில் எழுந்தருளினார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் சப்பரத்தை சுமந்து கொண்டு திருவாண்டபுரம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.

இதில், கள்ளிமந்தையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்