திருப்பூரில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்

Update: 2023-09-25 17:12 GMT


மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி திருப்பூரில் சிறு, குறு பனியன் சார்ந்த தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம் செய்ததால் ரூ.150 கோடிக்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது. 3 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.

வேலைநிறுத்தம்

தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் தொழில் நிறுவனங்களுக்கான 430 சதவீதம் உயர்த்திய நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பீக்ஹவர் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். 3பி-யில் இருந்து 3 ஏ1 நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் திருப்பூர் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு, மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பினர் பங்கேற்றனர்.

அதன்படி நேற்று திருப்பூரில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. சைமா, டீமா, டெக்பா, நிட்மா, பிரிண்டிங், எம்ப்ராய்டரி, காம்பேக்டிங், பவர்டேபிள், ரைசிங் உள்ளிட்ட பனியன் தொழில் சார்ந்த தொழில் அமைப்பினர் மற்றும் சிறு, குறு தொழில் அமைப்பினர் என 36 அமைப்பினர் ஆதரவு தெரிவித்து ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

ரூ.150 கோடிக்கு உற்பத்தி பாதிப்பு

இதன்காரணமாக திருப்பூரில் நேற்று பனியன் தொழில் சார்ந்த நிறுவனங்கள் மூடப்பட்டன. பின்னலாடை ஜாப்ஒர்க் சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டதால் 3 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்தித்தனர். நாளொன்றுக்கு ரூ.150 கோடிக்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூரை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் கோபி கூறும்போது, 'மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி அடுத்தகட்டமாக வருகிற 9-ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக தொழில்துறையினர் கருப்பு பேட்ஜ் அணிந்து அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மனு நீதிநாள் முகாமில் கலெக்டரை சந்தித்து தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்புவது, அடுத்தகட்டமாக வருகிற 16-ந் தேதி தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது, இதில் திரளானவர்கள் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

மேலும் செய்திகள்