திருக்குறள் முற்றோதல் போட்டி

பள்ளி மாணவ-மாணவிகளுக்கான திருக்குறள் முற்றோதல் போட்டியில் கலந்துகொள்ள அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-20 18:45 GMT

பள்ளி மாணவ-மாணவிகளுக்கான திருக்குறள் முற்றோதல் போட்டியில் கலந்துகொள்ள அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருக்குறள் முற்றோதல் போட்டி

நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இலக்கியங்கள் அனைத்திலும் சிறந்த திருக்குறளை பள்ளி மாணவ, மாணவிகள் இளம் வயதிலேயே கற்றுக்கொள்ள வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசாக தலா ரூ.15 ஆயிரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் திறனறிவு குழுவினரால் திறனாய்வு செய்து, தகுதி பெற்றவர்கள் தேர்வுசெய்யப்பெற்று, பரிசு பெறுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.

நாகை வருவாய் மாவட்டத்தில்...

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் 1330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். இயல் எண், பெயர், அதிகாரம் எண், குறள் எண், போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளை கூறும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

திருக்குறளின் அடைமொழிகள், திருவள்ளுவரின் சிறப்புப்பெயர்கள், திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்றை அறிந்தவராக இருத்தல் வேண்டும். நாகை வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் பயில்பவராக இருத்தல் வேண்டும். இப்போட்டியில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கு பெறலாம்.

பதிவிறக்கம் செய்து...

தமிழ் வளர்ச்சி துறையால் வழங்கப்பெறும் இப்பரிசினை, இதற்கு முன்னர் பெற்றவராக இருத்தல் கூடாது உள்ளிட்டவை போட்டியில் கலந்து கொள்ளும் தகுதிகளாகும்.

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் www.tamilvalarchithurai.com என்ற வலைதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் 3-ம் தளத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்