சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்
தைப்பூசத்தை யொட்டி வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
வால்பாறை
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 18-ம் ஆண்டு தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சாமி புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை வழிபாடு, மதியம் 2 மணிக்கு வால்பாறை எம்.ஜி.ஆர். நகர் முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் திருமண சீர் வரிசைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
அதைத்தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜை, அலங்காரம் திருக்கல்யாண வழிபாடு நடத்தப்பட்டு மாலை 6 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கும் வள்ளி தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலம், காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து கொடிமுடி தீர்த்தம் கொண்டு வந்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
அதைத்தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தி பறவை காவடி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
பகல் 11 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் வால்பாறையில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வானவேடிக்கையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை தைப்பூச விழா குழுவினர் செய்து வருகின்றனர்.