விராலிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு விராலிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-10-31 19:18 GMT

திருக்கல்யாண உற்சவம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று மாலை தெப்பக்குளத்தில் உள்ள மண்டபத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் முருக பெருமான், வள்ளி-தெய்வானையுடன் மலையை சுற்றி 4 வீதிகளிலும் வலம் வந்து மலை மேல் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து அங்கு முருக பெருமான், வள்ளி-தெய்வானைக்கு திருக்கல்யாணநடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சாந்தநாத சாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவில் நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதன்பின் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டன. திருக்கல்யாணத்தை திரளான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல பிரகதாம்பாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

கீரனூர்

கீரனூர் சிவன் கோவிலில் உள்ள சுப்பிரமணியர் சன்னிதானத்தில் முருக பெருமான் சமேத வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க சீர்வரிசைகள் பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

இதையடுத்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பொன்னமராவதி, திருவரங்குளம்

பொன்னமராவதி அருகே திருக்களாம்பூரில் காமகோடீஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் தனி சன்னதி கொண்டுள்ள வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவிலில் சுப்பிரமணியர் சமேத வள்ளி-தெய்வானைக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்