குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண விழா
குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண விழா நடந்தது.
தக்கலை:
குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் முருகன்-வள்ளி திருக்கல்யாண விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருகல்யாண விழா
தக்கலை அருகே உள்ள குமாரகோவிலில் வேளிமலை முருகன் கோவில் உள்ளது. முருக பெருமான் வேளிமலையில் வாழ்ந்து வந்த வள்ளிதேவியை காதலித்து திருமணம் செய்ததாக ஐதீகம். இதையொட்டி இங்கு ஆண்டுதோறும் முருகன்-வள்ளி திருக்கல்யாண விழா கொண்டாப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று அதிகாலை 4 மணிக்கு வேளிமலையில் உள்ள கல்யாண மண்டப விநாயகர் கோவிலில் கணபதி ஹோமம், அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 5.30 மணிக்கு முருகபெருமான் கோவிலில் இருந்து மலை மீதுள்ள கல்யாண மண்டபத்திற்கு செல்ல எழுந்தருளினார். அதன்பிறகு மாலை 4 மணிக்கு மலையில் இருந்து முருகபெருமானும், வள்ளிதேவியும் தனித்தனியாக பூப்பல்லக்கில் எழுந்தருளி கோவிலை நோக்கி வந்தனர்.
குறவர் படுகளம்
வரும் வழியில் வள்ளிதேவியின் உறவினர்கள் முருகபெருமானை தடுத்து நிறுத்தி சண்டையிடும் குறவர் படுகளம் நடந்தது. வழியில் பல இடங்களில் முருகபெருமானுக்கும், தேவியின் உறவினர்களுக்கும் இடையே நடந்த சண்டையானது இறுதியில் மாலை 6 மணிக்கு கோவில் மேற்கு நடைவாசலில் நடந்தது. இதில் தோல்வியடைந்த தேவியின் உறவினர்கள் முருகபெருமானிடம் சரணடைந்தனர்.
இதனையடுத்து கோவில் மேற்குவாசல் வழியாக வள்ளிதேவியை அழைத்து கொண்டு முருகபெருமான் கோவிலுக்குள் சென்றார். அங்கு அலங்கரிக்கப்பட்ட கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் சாமியும், தேவியும் எழுந்தருளினர்.
தொடர்ந்து நாருப்பெட்டியில் தேவிக்குரிய சீதனப் பொருட்களை வைத்து கோவில் வெளிவீதியில் வலம் வந்தபின் தேவிக்கு அணிவிக்கப்பட்டது. பட்டு வேட்டியில் முருகபெருமானும், பட்டுசேலையில் வள்ளிதேவியும் அமர்ந்திருக்க இரவு 7.50 மணிக்கு மங்கள வாத்தியம் இசைக்க, பக்தர்கள் பூவாரி சொரிய தேவி கழுத்தில் முருகன் தாலிகட்டும் சம்பிரதாய சடங்கு நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு மாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது.
வீதி உலா
இரவு 9 மணிக்கு வெள்ளி குதிரையில் முருகபெருமானும், மயில்வாகனத்தில் வள்ளிதேவியும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். இதன்பின் சாமிகளுக்கு கருப்புக்கட்டியால் செய்யப்பட்ட தோசை நிவேத்யமாக படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. சாமிக்கு கருப்புக்கட்டி தோசை நிவேத்யமாக படைப்பது ஆண்டுக்கு ஒரு முறை திருக்கல்யாணத்தன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் கோவில் மேலாளர் மோகன்குமார், பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் குமரி ப.ரமேஷ், திருவிழாக்குழு காப்பாளர் பிரசாத், தலைவர் சுனில்குமார், செயலாளர் சுரேஷ், பொருளாளர் செந்தில்குமார், கவுரவ ஆலோசகர் மாதவன் பிள்ளை, உதவி தலைவர் ராமதாஸ், கொ.சி.ராமதாஸ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவானது தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளோடு வருகிற 14-ந் ேததி வரை நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு கோவில் குளத்தில் சாமிகளுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.