வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை திருட்டு

Update: 2023-05-11 15:59 GMT


பல்லடம் அருகே வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்று விட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வியாபாரி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையம் ராயல் பார்க் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (வயது 63). இவர் வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனையாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் முசிறியில் நடைபெறும் ஒரு விழாவிற்காக சென்றுவிட்டார்.

இந்த நிலையில் அவரது வீட்டின் காம்பவுண்டு பிரதான மெயின் கேட், வீட்டின் கதவு ஆகியவை திறந்து கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து செல்போன் மூலம் ராஜேந்திர பிரசாத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

30 பவுன் நகை திருட்டு

இதையடுத்து அவர் குடும்பத்துடன் பல்லடம் திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் நகைகள் திருட்டுப்போயிருந்தது.

ராஜேந்திரபிரசாத் வெளியூர் சென்று இருப்பதை நன்கு தெரிந்து கொண்ட ஆசாமிகள், அவருடைய வீட்டிற்கு வந்து வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

போலீசில் புகார்

இது குறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவம் நடந்த வீட்டிற்கு போலீசார் வந்து விசாரித்தனர். தடயவியல் நிபுணர்களும் வந்து வீட்டின் கதவு, பீரோ ஆகியவற்றில் பதிவாகி இருந்த மர்ம ஆசாமிகளின் கைரேகைகளை சேகரித்தனர்.

மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என்றும், அப்படி பொருத்தப்பட்டிருந்தால் அதில் மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்