முத்தூரில் ஸ்கூட்டர் சீட்டு பூட்டை உடைத்து, டிக்கியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
வங்கியில் பணம் செலுத்த
முத்தூர் அருகே உள்ள தொட்டியபாளையம் பொட்டு சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவரின் மனைவி கவிதா (வயது 47). இவர் முத்தூரில் உள்ள ஒரு தனியார் டிராக்டர் நிறுவனத்தில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை 11.30 மணிக்கு கவிதா தனது நிறுவனத்தில் இருந்து ரூ.1 லட்சத்தை எடுத்துக்கொண்டு தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சீட்டின் அடியில் உள்ள டிக்கியில் வைத்துக் கொண்டு முத்தூர் - வெள்ளகோவில் சாலையில் உள்ள ஒரு வங்கியில் செலுத்துவதற்காக சென்றார்.
வங்கிக்கு சென்றபோது வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பணத்தை வங்கியில் பிறகு கட்டிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து திரும்பி வந்து மீண்டும் அந்த பணத்தை அப்படியே தனது ஸ்கூட்டர் சீட்டின் அடியில் வைத்துக்கொண்டு மகாலட்சுமி நகரில் தனது உரிமையாளர் வீட்டிற்கு புறப்பட்டு வந்தார்.
ரூ.1 லட்சம் திருட்டு
இந்த நிலையில் கவிதாவை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் மகாலட்சுமி நகரில் அவர் நிறுத்தி இருந்த ஸ்கூட்டர் சீட்டின் பூட்டை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்தை நைசாக திருடி கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர்.
சிறிது நேரத்தில் கவிதா தனது வாகனத்தை வந்து பார்த்த போது சீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த பணம் திருட்டு போய் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றிய புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து ஸ்கூட்டர் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.