"5 மாநிலங்களை உள்ளடக்கிய திராவிடத்தை தமிழ் என சுருக்கி விட்டனர்" கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

“5 மாநிலங்களை உள்ளடக்கிய திராவிடத்தை தமிழ் என சுருக்கி விட்டனர்” என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

Update: 2022-10-10 22:24 GMT

சென்னை,

சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அரசின் சார்பில் இந்தியாவில் உள்ள மொழி, வர்த்தகம், கலாசாரம், பயணம், சுற்றுலா மற்றும் வரலாற்றை விளக்கும் வகையிலான 'ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டம்' குறித்த 2 நாள் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று தொடங்கியது.

இந்த கருத்தரங்கில் அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 9 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கை கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கிவைத்து பேசியதாவது:-

தர்மத்தை கடைபிடித்த பாரதம்

ஆங்கிலேயர்கள்தான் இந்தியாவை இணைத்ததாக பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. இந்தியா என்பது ஒருவர் ஆட்சியின் கீழ் இருப்பதில்லை.

அதேபோல் பாரதம் என்ற சொல், ஆங்கிலேயர்கள் இந்தியா என்று பெயர் வைப்பதற்கு முன்னதாக வந்தது. இந்தியாவை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பாரதம் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பாரதம் என்பது பல்வேறு கலாசாரங்களை அடிப்படையாக கொண்டது.

பாரதம் எப்போதும் தர்மத்தை கடைபிடிப்பதாக இருந்தது. அரசர்கள் தர்மத்தை மீறினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இமயமலை முதல் கடைசி கடற்பகுதி வரை பாரதம் என பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுள்ளது.

திராவிடத்தை சுருக்கி விட்டனர்

1956-ம் ஆண்டு வரை மதராஸ் மாகாணமாக இருந்த பகுதிகள், அதன்பின்பு மொழி அடிப்படையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, இதில் இருந்து தற்போது தெலுங்கானா என அரசியலுக்காக பிரிக்கப்பட்டது. பல 100 ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்தவர்கள் தற்போது 'நான், நீ' என பேசி வருகின்றனர்.

தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியதுதான். ஆனால் தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறப்படக்கூடிய அளவிற்கு சுருக்கப்பட்டு உள்ளது.

கலாசாரம், ஆன்மிக ஒற்றுமை

பாரதியார் கூட பல பாடல்களில் பாரதம் என்று குறிப்பிட்டு எழுதி உள்ளார். அரசியல் கட்சிகள்தான் அதிகாரத்திற்காக மொழி, சாதி அடிப்படையிலும், சாதியில் உள்ள உட்பிரிவுகளை வைத்தும் அரசியல் செய்கிறார்கள். இதனைத்தான் அவர்கள் நமக்கு தொடர்ந்து கூறி வருகின்றனர்.

அரசியல் கட்சிகள் தங்கள் பார்வையை குறுக்கி உள்ளன. இந்தியா என்பது அடிப்படையில் அனைவருக்கும் இடையே உள்ள கலாசாரம், ஆன்மிக ஒற்றுமைதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்