வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க மறுக்கிறார்கள்

வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க மறுப்பதாக மக்கள்குறைதீர்வு கூட்டத்தில் சிறுவர்கள் மனு அளித்தனர்.

Update: 2022-11-21 17:39 GMT

வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க மறுப்பதாக மக்கள்குறைதீர்வு கூட்டத்தில் சிறுவர்கள் மனு அளித்தனர்.

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 437 மனுக்கள் பெறப்பட்டது.

அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை 3 பேருக்கும், வருவாய்த்துறை சார்பில் 4 முதியோர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு லட்சம் மதிப்பிலான பேட்டரி சக்கர நாற்காலி, 5 நபர்களுக்கு ஊன்றுகோல் ஆகியவற்றை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

மின் இணைப்பு வழங்க மறுக்கிறார்கள்

கூட்டத்தில் கூடபட்டு பகுதியைச் சேர்ந்த சந்துரு- மைதிலி தம்பதியரின் குழந்தைகள் அளித்த மனுவில், குடும்ப வறுமை காரணமாக, எங்கள் பெற்றோர் சென்னையில் தங்கி கூலி வேலை செய்கின்றனர். நாங்கள் சொந்த ஊரில் தாத்தாவின் பராமரிப்பில் உள்ளோம். அரசுப்பள்ளியில் படித்து வருகிறோம். எங்கள் வீட்டில் 8 ஆண்டுகளாக மின்சார இணைப்பு இல்லை. மனு அளித்தும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. வீட்டின் அருகே மின்மாற்றி இருந்தும், மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பு வழங்க மறுத்து வருகின்றனர். மின்வசதி இல்லாததால் எங்களால் வீட்டு பாடங்களை சரியாக படிக்க முடியவில்லை. எனவே, எங்கள் வீட்டுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், ஹரிஹரன், தனித்துணை கலெக்டர் கோவிந்தன், உதவி ஆணையர் (கலால்) பானு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மாரிமுத்து, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நடவடிக்கை எடுக்காவிட்டால் இங்கேயே சாகுறேன்

-பெண் திடீர் சாமியாட்டம்

மக்கள் குறை தீர்வு கூட்டத்துக்கு பெண் ஒருவர் வந்திருந்தார். அப்போது அவரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மனு தொடர்பாக கேள்வி கேட்டுக் கொண்டிருந்த போது, திடீரென உரத்த குரலில் எத்தனை வருஷம் இதுக்காக நடக்குறது? எனக்கு இன்னிக்கு முடிவு தெரியணும்? எப்பப் பாத்தாலும், மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது அப்டீனு மெசேஜ் மட்டும் அனுப்புனா போதுமா? இப்ப நடவடிக்கை எடுக்காட்டி நான் இங்கேயே சாகுறேன் என்றபடி சாமியாட்டம் போட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அந்தப் பெண்ணை அதிகாரிகள் அரங்குக்கு வெளியே அழைத்துச் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும் அந்தப் பெண் ஆத்திரம் தீராமல் கதறியபடி காணப்பட்டார். அதன் பின்னர் அந்தப் பெண்ணை, மாவட்ட வருவாய் அலுவலர் தன் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். அதன் பின்னர் அங்கு ஏற்பட்ட பரபரப்பு குறைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்