லஞ்சம் பெற்றுக்கொண்டுதான் பட்டா மாறுதல் செய்கின்றனர் -"கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்" -மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை
கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். ஆனால் லஞ்சம் பெற்றுக்கொண்டு தான் பட்டா மாறுதல்கள் செய்யப்படுகின்றன என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். ஆனால் லஞ்சம் பெற்றுக்கொண்டு தான் பட்டா மாறுதல்கள் செய்யப்படுகின்றன என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
அவமதிப்பு வழக்கு
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அழகப்பன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு மனுவில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா அமராவதிபுதூர் கிராமத்தில் எனது விவசாய நிலங்களில் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கடந்த 2019-ம் ஆண்டில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, எனது கோரிக்கையின்படி சட்டத்திற்கு உட்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி உத்தரவிட்டது. ஆனாலும் இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. கோர்ட்டு உத்தரவை முறையாக பின்பற்றாத சிவகங்கை மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளின் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
கலெக்டர் ஆஜர்
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து விளக்கம் அளிக்க சிவகங்கை மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, நீதிபதிகள் முன்பு ஆஜரானார்.
அப்போது நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கோர்ட்டு உத்தரவிட்டும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினர். பின்னர் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றுவதில், மாவட்ட கலெக்டர்களும், அதிகாரிகளும் அலட்சியம் காட்டுகின்றனர். பல்வேறு வழக்குகளிலும் இதுபோன்ற நிலை நீடிக்கின்றன. இதனால் கடந்த 100 நாட்களில் 600-க்கும் மேற்பட்ட அவமதிப்பு வழக்குகள் தாக்கலாகி உள்ளன என்று வேதனை தெரிவித்தனர்.
பட்டாவுக்கு லஞ்சம்
ஆனால் லஞ்சம் பெற்றுக் கொண்டுதான், அதிகாரிகள் பட்டா மாறுதல் செய்து தருகின்றனர். இதுசம்பந்தமாக மாவட்ட கலெக்டர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், கோர்ட்டு உத்தரவை முறையாக நிறைவேற்ற வேண்டும் என தாசில்தார்களுக்கு கலெக்டர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறினர்.
இதையடுத்து மனுதாரருக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவிட்டன என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கிறோம். மனுதாரருக்கு வேறு ஏதேனும் கோரிக்கை இருக்கும்பட்சத்தில் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரலாம் என உத்தரவிட்டனர்.