குடும்ப அட்டையை தாசில்தாரிடம் ஒப்படைக்க வந்தவர்களால் பரபரப்பு
ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டுத்தரக்கோரி குடும்ப அட்டையை தாசில்தாரிடம் ஒப்படைக்க வந்த ஆதிதிராவிட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்பு
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள இருக்கையூர் கிராமத்தில் 23 ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 1975-ம் ஆண்டு இலவச வீட்டு மனை மற்றும் பொது பயன்பாட்டிற்காக 1 ஏக்கர் 63 சென்ட் இடம் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 1986-ம் ஆண்டு மேற்கண்ட 23 குடும்பத்தினருக்கும் இலவச தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. அதில் அவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த 23 பேரில் ஒருவர் தனது இடத்துடன் சேர்த்து பொதுஇடமான 41 சென்ட் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பொது காரியங்களுக்காக இவ்விடத்தை பயன்படுத்த முயலும்போது பிரச்சினை ஏற்பட்டு வருகிறதாம். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லையாம்.
பேச்சுவார்த்தை
இதனால் ஆத்திரம் அடைந்த இப்பகுதி மக்கள் இதனை கண்டித்தும், ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டுத்தரக்கோரியும் தங்களின் ஆதார் கார்டு மற்றும் குடும்ப அட்டையை ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தாரிடம் ஒப்படைக்க உடையார்பாளையம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது அவர்களிடம் உடையார்பாளையம் தாசில்தார் ஆனந்தவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால், இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இல்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்துவோம் என கூறி கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.