விளையாட்டு மைதானத்திற்கு சூட்டப்பட்ட கருணாநிதியின் பெயரை கருப்பு மை பூசி பா.ஜனதாவினர் அழித்ததால் பரபரப்பு

விளையாட்டு மைதானத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, அவரது பெயரை கருப்பு மை பூசி அழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து எம்.எல்.ஏ., மேயர் தலைமையில் தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-06-03 22:01 GMT

கருணாநிதி பெயர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜ் காலனியில், ஆர்.வி.அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தை, ஓசூரை சேர்ந்த மறைந்த சமூக ஆர்வலர்கள் ராம்பிரகாஷ்-விஜயலட்சுமி தம்பதியினர், மாணவர்களின் பயன்பாட்டுக்காக தானமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த விளையாட்டு மைதானத்திற்கு 'முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி விளையாட்டு திடல்' என்று பெயர் சூட்ட, ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, நேற்று காலை கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, விளையாட்டு மைதானத்தில் அவரது பெயரில் புதிய பெயர் பலகையை திறந்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

பா.ஜனதாவினர் எதிர்ப்பு

இந்நிலையில், அந்த விளையாட்டு மைதானத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட பா.ஜனதாவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விளையாட்டு மைதானம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பா.ஜ.க.வினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த நிலையில், திடீரென பெயர் பலகையில் கருணாநிதி பெயரை, கருப்பு மையை பூசி அழிக்கும் பணியில் பா.ஜனதாவை சேர்ந்த 2 பேர் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, மை குப்பியை பறிமுதல் செய்தனர். மேலும், கருப்பு மையால் பெயர் அழித்தவர்களை போலீசார் அடிக்க முயன்றதால், கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பும், வாக்குவாதமும் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஓசூர் தெற்கு மண்டல பா.ஜனதா தலைவர் கே.நாகு என்ற நாகேந்திரா (40) மற்றும் அலசநத்தம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (40) ஆகிய 2 பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தி.மு.க.வினரும் போராட்டம்

முன்னதாக பெயர் பலகையில் கருணாநிதி பெயர் அழிக்கப்பட்ட தகவல் அறிந்து, தி.மு.க. மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., மேயர் சத்யா ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர்.

மேலும் விளையாட்டு மைதானம் முன்பு தரையில் அமர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்