கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டவரால் பரபரப்பு

கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-11 18:51 GMT

தாமரைக்குளம்:

உண்ணாவிரதம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கினர். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வந்த கீழநத்தம் கிராமத்தை சேர்ந்த சிற்றரசன், அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறுகையில், ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியை சேர்ந்த ஒருவர் கடந்த 2018-ம் ஆண்டு மாதம் ரூ.70 ஆயிரம் வாடகை தருவதாக கூறியதன்பேரில் பொக்லைன் எந்திரத்தை அனுப்பி வைத்தேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றி பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி வருகிறார். அவரிடம் இருந்து ெபாக்லைன் எந்திரத்தை மீட்டுத்தர வேண்டும். அவர் வாடகை தராததால் குடும்பத்தை காக்க வருமானம் இன்றி தவிக்கும் நிலை உள்ளது.

இடத்தை மீட்க வேண்டும்

மேலும் எனது மனைவி பெயரில் தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய டிராக்டருக்கு 14 தவணைகள் செலுத்தியுள்ள நிலையில், மீதம் இரு தவணைகள் மட்டுமே இருக்கும் போது அதிக பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் கூறினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத், சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை ஆகியோர் சிற்றரசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதையடுத்து, போலீசார் அவரை ஜீப்பில் ஏற்றினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

செட்டித்திருக்கோணம் காமராஜ்புரத்தை சேர்ந்த சுந்தர்ராஜின் மனைவி இளஞ்சியம் அளித்த மனுவில், என்னை ஏமாற்றி எனக்கு சொந்தமான மனையை சிலர் அபகரித்துக் கொண்டு, என்னை வீட்டை விட்டு வெளியே போகுமாறு விரட்டி அடிக்கின்றனர். எனவே எனது இடத்தை மீட்டு தர வேண்டும், என்று கூறியிருந்தார்.

நிவாரணம் வழங்க வேண்டும்

குண்டப்புரம் கிராமத்தை சேர்ந்த சிலர் கொடுத்த மனுவில், பொய்யூர் அருகே கடந்த 2019-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் 2 பேர் இறந்து விட்டனர். பலர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் தமிழக அரசால் வழங்கப்பட்டது. ஆனால் காயமடைந்த தங்கள் 9 பேருக்கு மட்டும் இதுவரை உதவி கிடைக்கவில்லை. எனவே தங்களுக்கு நிவாரணம் கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்