திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் கூடாது... அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Update: 2023-02-09 05:31 GMT

சென்னை,

சென்னை, தலைமை செயலகத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;

திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும். தினசரி காலை சிற்றுண்டிகள் வழங்குவதன் மூலமாக பல்லாயிரம் குடும்பங்கள் நம்மை வாழ்த்தி வருகின்றன. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர். இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் பாராட்டிக்கொண்டிருக்கின்றனர்.

மாதந்தோறும் ரூ.1000 பெறக்கூடிய மாணவிகள் பாராட்டி வருகின்றனர். இவை அனைத்தும் நம் கண்ணுக்கு முன்னால் தெரியக்கூடிய மகிழ்ச்சிகள். இதேபோல் அனைத்து திட்டங்களாலும் பயன்பெறுவோர் மகிழ்ச்சியடைந்தால், 8 கோடி மக்களும் பாராட்டும் அரசாக இந்த அரசு மாறிவிடும்.

இது உங்கள் கைகளில் தான் இருக்கிறது. அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் இருக்கக்கூடாது. ஒரு திட்டத்திற்கு ஏதாவது ஒர் இடத்தில் சிறு தடங்கல் இருக்கலாம். அந்த தடங்கல் உங்களுக்கு தான் தெரியும். அதனை அதிகாரிகள் மத்தியில் கூட்டத்தை கூட்டி திட்டத்தை செயல்படுத்துவது உங்கள் கைகளில் தான் உள்ளது.

திட்டங்கள் எந்த அளவில் செயல்பட்டு வருகிறது என்பதை நீங்கள் ஆய்வுசெய்யவேண்டும். 2023க்குள் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டது என்ற நிலையை எட்டியாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்