பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் வழங்க காலதாமதம் செய்யக்கூடாது

Update: 2023-07-04 19:30 GMT

கிருஷ்ணகிரி:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பால் உற்பத்தி செய்து கொடுக்கும் விவசாயிகளுக்கு பணம் வழங்க காலதாமதம் செய்யக்கூடாது என ஆவின் நிறுவனத்துக்கு, தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு அறிவுறுத்தி உள்ளது.

ஆய்வு

தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கிருஷ்ணகிரியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். கலெக்டர் கே.எம்.சரயு முன்னிலை வகித்தனர். இந்த குழுவில் எம்.எல்.ஏ.க்கள் ஒசூர் ஓய். பிரகாஷ், திருவாரூர் பூண்டி கலைவாணன், திருவாடனை கருமாணிக்கம், செங்கம் கிரி, மணப்பாறை அப்துல்சமது, வாசுதேவநல்லூர் சதன் திருமலைக்குமார், பாப்பிரெட்டிப்பட்டி கோவிந்தசாமி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அதே போல பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ., ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா, தமிழ்நாடு சட்டப்பேரவை இணைச் செயலாளர் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த குழுவினர் ஓசூர் டைட்டான் கடிகாரம் தயாரிக்கும் நிறுவனத்தில், அதன் செயல்பாடுகளையும், மைலான் நிறுவனத்தில் மருந்து பொருட்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் ஏற்றுமதி குறித்தும், குருபரப்பள்ளி டெல்டா மின்னணு பொருட்களின் உற்பத்தி மையத்தில் ஏற்றுமதி, பணியாளர்களின் விவரங்களை கேட்டறிந்து, மின்னணு பொருட்கள் உற்பத்தியை பார்வையிட்டனர்.

ஆவின் நிறுவனத்தில் ஆய்வு

தொடர்ந்து, கிருஷ்ணகிரி ஆவின் நிறுவனத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பால் வரத்து, பால் பதப்படுத்தும் பணிகள், நெய், பால்கோவா, குல்பி, மைசூர்பா, அல்வா, பாதாம் பவுடர், வெண்ணை, மோர், தயிர், பால் பேக்கட் தயாரிக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.

மேலும் கூடுதலாக பால் கொள்முதல் செய்யவும், பால் அதிகமாக வரும் காலங்களில் பால் பவுடர், நெய் போன்ற பொருட்களை கூடுதலாக தயாரிக்கவும், ஆவினுக்கு பால் உற்பத்தி செய்து கொடுக்கும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்க தாமதம் செய்யக்கூடாது. உரிய நேரத்தில் பணம் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்கள்.

ஆய்வு கூட்டம்

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைகள் தொடர்பான துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.

பின்னர், பல்வேறு துறைகளின் சார்பில் 277 பேருக்கு ரூ.51 லட்சத்து 96 ஆயிரத்து 302 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், ஒசூர் உதவி கலெக்டர் சரண்யா, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்