பாதுகாப்பு படைகள், பொதுமக்கள் இடையே நல்லுறவு இருக்க வேண்டும்
இந்தியாவில் பாதுகாப்பு படைகள், பொதுமக்கள் இடையே நல்லுறவு இருக்க வேண்டும் என்று அருணாசல பிரதேச கவர்னர் பி.டி.மிஸ்ரா பேசினார்.
ஊட்டி,
இந்தியாவில் பாதுகாப்பு படைகள், பொதுமக்கள் இடையே நல்லுறவு இருக்க வேண்டும் என்று அருணாசல பிரதேச கவர்னர் பி.டி.மிஸ்ரா பேசினார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்கு அருணாசல பிரதேச மாநில கவர்னர் பி.டி.மிஸ்ரா நேற்று முன்தினம் வந்தார். இந்தநிலையில் நேற்று பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கவர்னர் பி.டி.மிஸ்ரா கலந்து கொண்டு 'பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் இடையேயான நல்லுறவு' என்ற தலைப்பில் பேசியதாவது:-
பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படைகளுடன் நல்லுறவு இருக்க வேண்டும். பண்டைய காலத்தில் ராணுவம் மற்றும் மக்களிடையே நல்லுறவு இருந்தது. இதுகுறித்து மகாபாரதம் மற்றும் ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இடைக்காலத்தில் இந்த உறவு நீடிக்கவில்லை. ஆங்கிலேயர் காலத்தில் ராணுவ நடவடிக்கைகள் மேலோங்கி இருந்தது. சுதந்திரத்துக்கு பின்னர் இந்த உறவு மேம்பட்டது.
ராணுவ தளவாடங்கள்
2014-ம் ஆண்டுக்கு பின்னர் முப்படைகளுக்கு தலைமை தளபதி நியமிக்கப்பட்டார். தற்போது நாடு சிறப்பாக முன்னேறிக்கொண்டு வருகிறது. முப்படை அதிகாரிகள், நாட்டுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். தீர்க்கமான முடிவுகள் எடுக்கக்கூடிய தலைமை இருந்தால், நாம் நினைத்தது நடக்கும். தற்போது நாட்டில் வலிமை மிக்க தலைமை இருப்பதால், பாதுகாப்புப் படைகள் சிறப்பாக செயல்படுகின்றன. மேலும், ஆத்மநிர்பார் என்ற சுயசார்பு திட்டத்தின் கீழ் ராணுவ தளவாடங்களை நாமே உற்பத்தி செய்கிறோம்.
நமது ஏவுகணைகளை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.35 ஆயிரம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படும். பாதுகாப்புப் படையினர் மனித நேயத்தோடு பணியாற்ற வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு உதவி புரிய வேண்டும். இதனால், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடையே நல்லுறவு மேம்படும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கவர்னர் பி.டி.மிஸ்ராவை கல்லூரி முதல்வர் கமாண்டென்ட் லெப்டினென்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் வரவேற்றார்.