திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும்

திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும்

Update: 2022-12-05 19:41 GMT

திருமண்டங்குடியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என கரும்பு விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் நேரில் வலியுறுத்தினர்.

தனியார் சர்க்கரை ஆலை

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ளது திருமண்டங்குடி சர்க்கரை ஆலை. இந்த சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பாபநாசம் காவிரி பாசன கரும்பு விவசாயிகள் சங்கத்தினர், காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் விவசாயிகள் கூறுகையில், திருமண்டங்குடியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையை மற்றொரு நிர்வாகம் வாங்கியுள்ளது. வாங்கிய நிர்வாகம் கரும்புக்கான நிலுவைத் தொகையை தவணை முறையில் வழங்கி வருகிறது. ஆனால் நிலுவைத் தொகை முழுவதையும் ஒரேத்தவணையில் வழங்க வேண்டும் என சில விவசாயிகள் ஆலை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆலையில் பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சுமூக தீர்வு

கலெக்டர் கூட்டிய முத்தரப்பு கூட்டத்தில் நிலுவைத் தொகை, வெட்டுக்கூலி, வாகன வாடகையை புதிய நிர்வாகம் தருவதாக ஒப்புக் கொண்டனர். ஆனால் சில விவசாயிகள் பொய் செய்திகளை பரப்பி, விவசாயிகளை திசை திருப்பி வருகின்றனர். இதனால் நடப்பு ஆண்டு நாங்கள் கரும்பு பயிரிட பதிவு செய்ய வேண்டி இருப்பதால், இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விவசாயிகளிடம் கூறுகையில், இதுகுறித்து குழு அமைக்கப்பட்டு பிரச்சினையை தீர்க்க வருகிற 9-ந் தேதி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்