'அரசியல் அனுபவம் இல்லாத அண்ணாமலையின் பேச்சுக்கு பதிலளிக்கத் தேவையில்லை' - சசிகலா

அண்ணாமலையின் சிறுபிள்ளைத்தனமான செயல்கள், அவர் சார்ந்துள்ள இயக்கத்திற்கே தமிழகத்தில் கெடுதலை ஏற்படுத்தும் என சசிகலா தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-13 16:46 GMT

சென்னை,

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தது. முன்னாள் முதல்-அமைச்சர் (ஜெயலலிதா) நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அதனால்தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அது ஊழலில் முதல் இடம் என்பதை என்னால் சொல்ல முடியும்" என்று கூறியிருந்தார்.

அண்ணாமலையின் இந்த கருத்து அ.தி.மு.க.வினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் விமர்சனத்துக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவகலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 'மக்களால் நான் மக்களுக்காகவே நான்' என வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய ஜெயலலிதா குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

"ஜெயலலிதாவின் அரசியல் பயணம், அவர் மக்களுக்கு ஆற்றிய அரும்பணிகள் குறித்து அண்ணாமலைக்கு எதுவுமே தெரியவில்லை. இது பற்றியெல்லாம் எதுவும் அறியாத, அரசியல் அனுபவம் இல்லாத ஒரு குழந்தையான அண்ணாமலையின் பேச்சுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை. அண்ணாமலையின் சிறுபிள்ளைத்தனமான செயல்கள், அவர் சார்ந்துள்ள இயக்கத்திற்கே தமிழகத்தில் கெடுதலை ஏற்படுத்தும்.

ஜெயலலிதாவை 6 முறை முதல்-அமைச்சராக்கி அழகு பார்த்தவர்கள் தமிழக மக்கள். அண்ணாமலையின் பேச்சை தமிழக மக்கள் யாரும் ரசிக்கவில்லை. பெண்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றமடைய முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். யார் எத்தனை ஜென்மங்கள் எடுத்து வந்தாலும் ஜெயலலிதாவின் சாதனைகளை முறியடிக்க முடியாது."

இவ்வாறு சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


 

Tags:    

மேலும் செய்திகள்