தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்படும் கரிக்கையூர் உண்டு உறைவிடப் பள்ளிக்கூடம்-கிராம மக்கள் பாராட்டு
தனியார் பள்ளிகளுக்கு இணையாக கரிக்கையூர் உண்டு உறைவிடப் பள்ளிக்கூடம் செயல்படுகிறது. இதனால் பள்ளி நிர்வாகிகளை பொதுமக்கள் பாராட்டி உள்ளார்கள்.
கோத்தகிரி
தனியார் பள்ளிகளுக்கு இணையாக கரிக்கையூர் உண்டு உறைவிடப் பள்ளிக்கூடம் செயல்படுகிறது. இதனால் பள்ளி நிர்வாகிகளை பொதுமக்கள் பாராட்டி உள்ளார்கள்.
உண்டு உறைவிடப்பள்ளி
கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட கரிக்கையூர் கிராமம் கோத்தகிரியில் இருந்து சுமார் 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடைக்கோடி பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமமாகும். இங்கு அரசு பழங்குடியின உண்டு உறைவிடப் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1962 -ம் ஆண்டு பழங்குடியின மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் ஆரம்ப பள்ளியாக தொடங்கப்பட்டது. இதையடுத்து சில ஆண்டுகளுக்கு பின், நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதற்கு பின் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கடந்த 2007 -ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கரிக்கையூரை சுற்றியுள்ள பழங்குடியின கிராமங்களான சாமைகோடல், வக்கனமரம், கொக்கோடு, முடியூர், பங்களாபடிகை, சக்கைப்படிகை, கண்டிசெட், பர்கூர், நடூர், மல்லிகொப்பையூர், கரிக்கையூர், குமாரமுடி, கொத்திமுக்கு, ஆந்தியரை, நந்திப்பட்டி, அத்திக்கூடு, கண்டிப்பட்டி, மெட்டுக்கல், கல்லாம்பாளையம், அல்லிமாயர் மற்றும் காந்தவயல் போன்ற 21 இருளர் மற்றும் குரும்பர் பழங்குடியின கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் இந்த பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.
தனியார் பள்ளிக்கு இணையாக...
இப்பள்ளியில் 1 -ம் வகுப்பு முதல் 10- ம் வகுப்பு வரை 2023-24 கல்வியாண்டில் மொத்தம் 117 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் 8 பள்ளி கட்டிடங்கள் மற்றும் மாணவ-மாணவிகள் தங்கி படிக்க தனி தனி அறை வசதிகள் ஆகியவை உள்ளது. மேலும் பள்ளி குழந்தைகளுக்கு கணினி வழி கல்வியும் பயிற்றுவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் பள்ளி கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்த நிலையில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் சக ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் பழங்குடியின பள்ளியை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றி உள்ளார். இதேபோல் 'இஸ்ரோ' விண்வெளி கல்வி திட்டத்தின் கீழ் இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, இந்திய தொழில்நுட்ப காங்கிரஸ் சங்கம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தயாரிக்கும் 75 சிறிய வகை செயற்கைக்கோள்களை இஸ்ரோ ராக்கெட்கள் மூலம் விண்ணில் செலுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதில் பிரம்மோஸ் மையத்தின் நிறுவனரும், மூத்த விஞ்ஞானியுமான ஏ.சிவதாணுப் பிள்ளை தலைமையின்கீழ் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆர்.எம்.வாசகம், கே.சிவன், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் வழிகாட்டுதலின்படி ஒரு செயற்கைக்கோள், முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்கள் பங்களிப்பில் தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவன் ராஜன், மாணவி ரேவதி, கெங்கரை அரசு உயர்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவன் சரவணன், மாணவி மஞ்சுளா, கீழ் கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவன் சரவணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு இந்த நிகழ்வில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராட்டு
வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் கரிக்கையூர் உண்டு உறைவிடப் பள்ளி அமைந்துள்ளதால் 100 மீட்டர் தொலைவிற்கு சுற்றுச்சுவர் அமைத்தும், தற்போது புதிதாக நுழைவுவாயில் அமைத்து பெயர் பலகை, திருவள்ளுவர், அப்துல்கலாம், அம்பேத்கர் போன்றவர்களின் உருவப்படங்கள் வரைந்தும், வகுப்பறைகளுக்கு வர்ணங்கள் பூசி, மின் விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் புதிதாக கழிவறைகள், பள்ளி வளாகத்தை சுற்றிலும் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல வாகன வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மாணவர்களுக்கு சிறந்த கல்வியை அளித்து அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையில், தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வி அளித்து வரும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை அப்பகுதி மக்களும், தன்னார்வலர்களும் பாராட்டி ஊக்குவித்து வருகின்றனர்.