தியாகராஜர் கோவிலில் தெப்பத்திருவிழா

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தெப்பத்திருவிழா நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-05-25 18:45 GMT

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தெப்பத்திருவிழா நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தெப்பத்திருவிழா

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆழித்தேரோட்டம் நடந்த பின்னர் தெப்பத்திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆழித்தேரோட்டம் கடந்த மாதம்(ஏப்ரல்) 1-ந் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து தெப்பத்திருவிழா நேற்று தொடங்கியது

விழாவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பார்வதி, கல்யாணசுந்தரர் கமலாலய குளத்தை வலம் வந்தனர். அதனை தொடர்ந்து குளமே ஆலயமாக கொண்ட கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழா தொடங்கியது.

மின்னொளியில் தெப்பம்

முன்னதாக இரவு 7.30 மணிக்கு திருவாரூர் துர்க்காலயா ரோட்டில் உள்ள தெப்ப மண்டபத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் பார்வதி, கல்யாணசுந்தரர் புறப்பட்டு கமலாலயம் குளத்தை அடைந்தனர். அங்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமி எழுந்தருளினார். அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட தெப்பம் இரவு 8.30 மணிக்கு தொடங்கியது.

தெப்பம் கமலாலய குளத்தை 3 முறை சுற்றி வந்தது. ஒரு முறை சுற்றி வர 3 மணி நேரமானது. இதனால் விடிய, விடிய தெப்பத்திருவிழா நடைபெற்றது. மின்னொளியில் தெப்பம் குளத்தில் சுற்றி வரும் அழகை காண கமலாலய குளத்தின் கரைகளில் பக்தர்கள் திரண்டு நின்று சாமி தரிசனம் செய்தனர்.

2 நாட்கள் நடக்கிறது

தெப்பத்திருவிழா இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும்(சனிக்கிழமை) நடக்கிறது. தெப்பத்திருவிழாவை காண திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். விழாவில் கலெக்டர் சாருஸ்ரீ, பூண்டி கே கலைவாணன் எம்.எல். ஏ., போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், நகரசபை தலைவர் புவன பிரியா செந்தில், துணை தலைவர் அகிலா சந்திரசேகர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அழகிய மணாளன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

தெப்ப திருவிழாவிற்கு திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் வெள்ளத்துரை, ஈஸ்வரன் மேற்பார்வையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.. 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் குளத்தை சுற்றி 2 படகுகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்