தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்

தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-03-08 18:34 GMT

மாசி மக திருவிழா

கரூர் தாந்தோணிமலையில் பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா நடைபெறு வழக்கம். அதேபோல் இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பின்னர் தினமும் சுவாமி வெள்ளி கருட வாகனம், சேஷ வாகனம், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடந்த 4-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும், 6-ந்தேதி தேரோட்டமும் நடந்தது.

தெப்ப உற்சவம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலின் முன்பு உள்ள தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு, தெப்பத்தேரை அலங்கரித்து குளத்தில் விடப்பட்டது. நேற்று இரவு 7 மணி அளவில் கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தெப்பத்தேரில் எழுந்தருளினார்.

பின்னர் வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து குளத்தை சுற்றி சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைக்கண்ட பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷங்கள் எழுப்பி சுவாமியை தரிசனம் செய்தனர். இதில் கரூர், தாந்தோணிமலை, காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர். வருகிற 14-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும், 15-ந்தேதி புஷ்ப யாகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்