வீட்டின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு
பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரம்பலூர் புறநகர் பகுதியான அரணாரை வடக்கு ஏ.வி.ஆர். நகரில் வசித்து வந்தவர் செல்லதுரை (வயது 45). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு பிரிந்து சென்னையில் வசித்து வருவதோடு, அங்கு சினிமா துறையில் செட் அமைப்பாளராக பணி புரிந்து வருகிறார். இதனால் அவருடைய சொந்த வீட்டை அவரது தாய் பொன்னாமணி 10 நாட்களுக்கு ஒரு முறை வந்து பார்த்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம் போல் வந்து செல்லத்துரையின் வீட்டை சுத்தம் செய்த பொன்னாமணி மாலையில் பூட்டி விட்டு சென்றார். இந்த நிலையில் நேற்று காலையில் செல்லத்துரையின் வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அக்கம், பக்கத்தினர் பொன்னாமணிக்கும், செல்லத்துரைக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அப்போது செல்லத்துரை வீட்டில் பீரோவில் ரூ.25 ஆயிரம் வைத்திருந்ததாகவும், நகை ஏதும் இல்லை என்றார். இதையடுத்து பொன்னாமணி வந்து பார்த்த போது செல்லத்துரையின் வீட்டில் பீரோவில் இருந்த ரூ.25 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.