பெட்டிக்கடையில் நகை, பணம் திருட்டு
பெட்டிக்கடையில் நகை, பணம் திருடியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை கிருஷ்ணப்ப தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை மனைவி அங்கம்மாள் (வயது 60). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது கடையை திறந்து விட்டு தன்னுடைய 10 கிராம் எடையுள்ள 3 தங்க மோதிரங்கள், 120 கிராம் எடையுள்ள வெள்ளி கொலுசுகள், ரூ.6 ஆயிரம் ரொக்கம், ஒரு செல்போன் ஆகியவற்றை ஒரு மஞ்சள் பையில் போட்டு கடையினுள் வைத்துவிட்டு குடிநீர் பிடிக்கச்சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது அந்த பொருட்கள் இருந்த மஞ்சள் பையை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் அதனை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகை, கொலுசு, பணம், செல்போன் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரமாகும்.
இதுகுறித்து அங்கம்மாள், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.