சேலம் லைன்மேட்டில் பரிகார பூஜை செய்வதாக கூறி மூதாட்டியிடம் நகை அபேஸ்

சேலம் லைன்மேட்டில் பரிகார பூஜை செய்வதாக கூறி மூதாட்டியிடம் நகையை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-07-08 23:05 GMT

அன்னதானப்பட்டி:

பரிகார பூஜை

சேலம் லைன்மேடு பென்ஷன் லைன் 2-வது தெரு பகுதியை சேர்ந்தவர் அக்பர் கான், பாத்திரக்கடை தொழிலாளி. இவருடைய மனைவி ஜான் பேகம் (வயது 65). நேற்று அக்பர் கான் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் ஜான் பேகம் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அப்போது அவர்களது வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர் " உங்கள் வீட்டில் கஷ்டங்கள், பிரச்சினைகள், தோஷங்கள், காத்து, கருப்பு, பில்லி, சூனியம் பிரச்சினைகள் சூழ்ந்து இருப்பதாகவும், அவற்றை சிறப்பு பரிகார பூஜைகள் செய்து விரட்டுவதாகவும் கூறியுள்ளார். மேலும் இதனால் பணம், வருமானம் பெருகி லாபமடைவீர்கள், உங்கள் குடும்பம் மிகுந்த சந்தோஷமாக இருக்கும்" என கூறியுள்ளனர். தொடர்ந்து பூஜை செய்யாவிட்டால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இறந்து விடுவீர்கள் என்று தனியாக இருந்த மூதாட்டியை அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் பயந்து போன ஜான் பேகம் அந்த மர்ம நபரை வீட்டிற்குள் வரவழைத்து பரிகார பூஜைகள் செய்யுமாறு கூறி உள்ளார். இதையடுத்து அந்த நபர் பரிகார பூஜைகள் செய்வதற்காக வீட்டில் இருக்கும் நகைகளை கொண்டு வந்து தரும்படி கேட்டதாக தெரிகிறது.

புகை போட்ட மர்ம நபர்

இதைத்தொடர்ந்து மூதாட்டி தான் வைத்திருந்த ¾ பவுன் தோடு, 1 மோதிரம் ஆகியவற்றை எடுத்து வந்து சாமி பூஜைகள் செய்ய அந்த மர்ம நபர் வைத்திருந்த மண் சட்டியில் வைத்துள்ளார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர் வீடு முழுவதும் மந்திரங்கள் ஓதி, சாம்பிராணி புகையை அதிகளவில் பரப்பி விட்டார். இதனால் வீட்டின் அறை முழுவதும் புகை மூட்டமாக இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட அந்த மர்ம நபர் நகையை அபேஸ் செய்து கொண்டு அங்கிருந்து திடீரென மாயமாகி விட்டார்.

இதைக்கண்டு ஜான் பேகம் அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவலை தனது கணவரிடம் கூறிய அவர் தன்னை மந்திரவாதி ஏமாற்றி நகைகளை நைசாக திருடிச்சென்று விட்டார் என அழுது புலம்பி உள்ளார்.

வழக்குப்பதிவு

இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார், நகையை திருடிச்சென்ற மர்ம நபர் மீது மோசடி பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்