அடகு கடையில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு

குடியாத்தத்தில் அடகு கடையின் பூட்டை உடைத்து நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Update: 2023-04-11 16:10 GMT

குடியாத்தத்தில் அடகு கடையின் பூட்டை உடைத்து நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

அடகு கடையின் பூட்டு உடைப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த தங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி ரம்யா. இவர், குடியாத்தம் ராஜேந்தர்சிங் தெரு-காந்திரோடு இணைக்கும் சந்திப்பில் கவரிங் நகை கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக ரம்யாவிற்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அவர் அங்கு வந்து பார்த்த போது, அடகு வைத்திருந்த சிறு, சிறு நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

தங்கம்-வெள்ளி பொருட்கள் திருட்டு

மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்தனர். கடைக்கு அருகில் உள்ள ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் முகத்தில் துணியை கட்டியபடி வந்த 2 இளைஞர்கள் அந்த கேமராவின் கோணத்தை மாற்றி வைத்துவிட்டு இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த திருட்டு சம்பவத்தில் கடையில் இருந்த 75 கிராம் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுதொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்