ரெயில் பயணிகளிடம் தங்க நகை, பணம் திருட்டு - 2 பேர் கைது

சென்னை ரெயில்வே கோட்டத்தில் ரெயில் பயணிகளிடமிருந்து நகைகளை திருடிய 2 பேரையும் ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-10-20 15:07 IST

திருச்சியை சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன் (வயது 55). தங்க நகை வியாபாரியான இவர் திருச்சியிலிருந்து தொழில் ரீதியாக ஆந்திர மாநிலம் விஜயவாடா சென்றார். பின்னர், கடந்த 13-ந்தேதி திருச்சி செல்வதற்காக சென்னை எழும்பூர் ரெயில்நிலையம் வந்த அவர் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினார். அப்போது, தான் கொண்டு வந்த பையை கீழே வைத்து விட்டு உறங்கியுள்ளார். சிறிது நேரத்தில் ரெயில் புறப்பட்டபோது எழுந்து பார்த்த சந்தானகிருஷ்ணன் தனது பை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே ரெயிலில் இருந்து இறங்கி எழும்பூர் ரெயில்நிலையத்தில் தனது பையும் அதிலிருந்த அட்டைகளில் 12 காரட் தங்க மூக்குத்திகள், எமரெல்ட் கற்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போன் காணவில்லை என புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரெயில்நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில், புரசைவாக்கம், முத்தையா நாயகர் தெருவைச்சேர்ந்த அச்சு என்ற உதயகுமார் (21) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடுபோன ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்க மூக்குத்திகள், எமரெல்டு கற்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

இதுபோல் மற்றொரு வழக்கில், சென்னை புரசைவாக்கம், வள்ளலார் தெருவைச்சேர்ந்தவர் சதீஷ்குமார் (44). இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி பெங்களூரிலிருந்து சென்னை சென்டிரலுக்கு சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்தார். ரெயில் மறுநாள் அதிகாலை 3.35 மணியளவில் பேசின்பிரிட்ஜ் ரெயில்நிலையத்தை கடந்தபோது இறங்குவதற்கு தயாரானார். அப்போது தனது பையில் வைத்திருந்த 5 கிலோ 28 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் ரூ.12 லட்சத்து 90 ஆயிரம் ரொக்கம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, சென்னை சென்டிரல் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில், அரக்கோணம் ஓச்சேரி சாலையை சேர்ந்த ஜெகன் குமார் (37) என்பவரை ரெயில்வே போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து திருடு போன 5 கிலோ 28 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் ரூ.12 லட்சத்து 90 ஆயிரத்தை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்