பிடாரி அம்மன் கோவிலில் 3½ பவுன் நகை திருட்டு
காட்டுமன்னார்கோவில் அருகே பிடாரி அம்மன் கோவிலில் 3½ பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே வீரானந்தபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிடாரிஅம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக சன்னதியில் இருந்த பிடாரிஅம்மன் சிலை அருகே இரும்பு தகடுகளால் அமைக்கப்பட்ட கொட்டகையில் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இரும்பு தகடுகளை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அம்மன் கழுத்தில் கிடந்த 3½ பவுன் நகைகளை திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அக்கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.