200 கிலோ தக்காளி திருட்டு

திட்டக்குடியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் 200 கிலோ தக்காளியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Update: 2023-07-28 18:53 GMT

திட்டக்குடி,

தக்காளி விலை உயர்வு

அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தாக்காளி இந்த ஆண்டு கிலோ.100-ரூபாயை தாண்டியது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதைடுத்து அரசு ரேஷன்கடை, பண்ணை பசுமை காய்கறி கடைகள் ஆகியவை மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர்.

தாக்காளி விலை உயர்வால் சில ஓட்டல்களில் தக்காளி சட்னியையும் ரத்து செய்துவிட்டனர். தற்போது தக்காளி கிலோ ரூ.100-க்கு குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திருட்டு

இந்த சூழ்நிலையில் சில இடங்களில் தக்காளி கடத்தல், திருட்டு போன்ற சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்தன.

இதேபோல் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள காய்கறி மார்க்கெட்டிலும் மர்ம நபர்கள் தக்காளியை திருடிச்சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

திட்டக்குடி பஸ் நிலையம் பின்புறம் அண்ணா காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை வைத்து காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்கள். இங்குள்ள சில கடைகளில் கடந்த சில நாட்களாக தக்காளி திருடு போவது தெரியவந்தது.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு சென்றனர். பின்னர் நேற்று காலை கடைகளை திறக்க வந்தபோது சில கடைகளின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ரூ.20 ஆயிரம்

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது இரவு நேரத்தில் யாரோ மர்ம நபர்கள் கடைகளில் புகுந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 200 கிலோ தக்காளியை திருடிச்சென்றது தொியவந்தது. இது குறித்து காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் வணிகர் சங்கம் பொருளாளர் வளையாபதி, செயலாளர் ரவிச்சந்திரன், தாயுமான், ராமன் சக்திவேல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்