வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு

கலவையில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

Update: 2023-01-04 17:04 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த கணியந்தாங்கல் கிராமத்தில் ஆற்காடு சாலையில் வசிப்பவர் ராஜம்மாள் (வயது 50). இவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன் தினம் காலை 7 மணி அளவில் தனது மாடுகளை நிலத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். மகன் ராஜேஷ் காலை 8 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

மாலை 5 மணி அளவில் ராஜம்மாள் மாடுகளை வீட்டுக்கு ஓட்டி வந்துள்ளார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.

அதில் வைத்திருந்த 15 பவுன் நகைகள் மற்றும் பணம் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கலவை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாரதிதாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணமூர்த்தி, சங்கர், காந்தி ஆயோர் சென்று விசாரணை செய்தனர். மேலும் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின்பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்