வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு
திருவண்ணாமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நகை திருட்டு
திருவண்ணாமலை அருகே நல்லவன்பாளையத்தில் உள்ள ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன் என்பவரின் மனைவி சித்ரா (வயது 58). இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு கடந்த 16-ந் தேதி செங்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளதாக அக்கம் பக்கத்தினர் சித்ராவிற்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து சித்ரா வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள், பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவருக்கு வீட்டில் இருந்த 15 பவுன் நகைகள் மர்ம நபர்களால் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இது குறித்து அவர் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருடர்களின் விரல் ரேகைகள் சேகரிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.