திருவெறும்பூர் பகுதியில் 2 நாட்களில் 4 கோவில்களில் திருட்டு

திருவெறும்பூர் பகுதியில் 2 நாட்களில் 4 கோவில்களில் திருட்டு நடைபெற்றுள்ளது.

Update: 2023-04-18 19:54 GMT

திருவெறும்பூர் பகுதியில் 2 நாட்களில் 4 கோவில்களில் திருட்டு நடைபெற்றுள்ளது.

செல்லாயி அம்மன் கோவில்

திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் செல்லாயி அம்மன் கோவிலில் உள்ளது. சம்பவத்தன்று இரவு கோவிலில் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள் அம்மன் கழுத்தில் கிடந்த 4 கிராம் தங்க தாலி, பொட்டு ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

உண்டியல் காணிக்கைகள் திருட்டு

இதேபோல் நேற்று திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார் பாளையம் பகுதியில் உள்ள துரோபதி அம்மன் கோவில், விநாயகர் கோவில், பாளைய மாதா கோவில் ஆகிய 3 கோவில்களில் உள்ள உண்டியலை உடைத்து உண்டியலில் இருந்த காசுகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர். கடந்த 2 நாட்களில் 4 கோவில்களில் திருட்டு நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

*தா.பேட்டையை அடுத்த நல்லப்ப நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பவுன்ராஜ் (33). இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். இதனை திருடியதாக பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (21) என்பவரை தா.பேட்டை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணுக்கு மிரட்டல்

*தொட்டியம் அண்ணா நகர் காலனியை சேர்ந்தவர் ஜெகதீசன் மனைவி மேகலா (33). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற அதே தெருவை சேர்ந்த நடராஜ் (30) என்பவரை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த நடராஜ் மேகலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, அவரது கணவரை தாக்கியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜை கைது செய்தனர்.

பாதயாத்திரை பக்தர் காயம்

*தா.பேட்டையை அடுத்த பி.கே.சாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அழகேசன். இவரது மனைவி ஜெயலட்சுமி (30). இவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்வதற்காக தா. பேட்டை வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது தா.பேட்டை - துறையூர் செல்லும் சாலையில் ஆராய்ச்சி அருகே அதே பகுதியை சேர்ந்த செல்வம் (50) என்பவர் ஓட்டி வந்த மொபட் மோதியதில் ஜெயலட்சுமி காயமடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சம்பவம் குறித்து தா.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூதாட்டி தற்கொலை

*திருச்சி கருமண்டபம் விஸ்வாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் ரெங்கராஜன். இவரது மனைவி கலா (75). உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்த அவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொரோனாவுக்கு 23 பேர் பாதிப்பு

*திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று தொற்றில் இருந்து குணமடைந்த 8 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது வரை 127 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்