தர்மபுரி அரசு கலை கல்லூரியில் தேர்வு எழுத வந்த மாணவியின் 1 பவுன் சங்கிலி, செல்போன் திருட்டு-மாணவர் கைது

Update: 2022-11-14 18:45 GMT

நல்லம்பள்ளி:

தர்மபுரி அரசு கலை கல்லூரியில் தேர்வு எழுத வந்த மாணவியின் ஒரு பவுன் சங்கிலி, செல்போனை திருடிய மாணவரை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவி

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் நிவேதா (வயது 21). இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.எட். படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பி.எட். தேர்வு எழுத தர்மபுரி அரசு கலை கல்லூரிக்கு வந்திருந்தார். இதேபோல் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளும் தேர்வு எழுத வந்திருந்தனர். அவர்கள் செல்போன் உள்ளிட்ட தங்களது பொருட்களை தேர்வு அறைக்கு வெளியே வைத்து விட்டு, தேர்வு எழுதசென்றனர்.

இதேபோல் மாணவி நிவேதா தனது 1 பவுன் தங்க சங்கிலி, வெள்ளிக்கொலுசு, செல்போன் ஆகியவற்றை தேர்வு அறைக்கு வெளியே தனது பையில் வைத்து விட்டு சென்றார். பின்னர் அவர் தேர்வு எழுதி விட்டு, வெளியே வந்தார்.

தங்க சங்கிலி திருட்டு

அங்கு பையில் வைத்திருந்த பொருட்களை சரி பார்த்தார். அப்போது அவருடைய 1 பவுன் தங்க சங்கிலி, வெள்ளிக்கொலுசு, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் திருட்டு குறித்து அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கல்லூரிக்கு சென்று விசாரணைநடத்தினர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டன. போலீசாரின் விசாரணையில் தர்மபுரி அரசு கலை கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வரும் செட்டிகரை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மகன் லோகேஸ்வரன் (19) திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

கைது

அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், அவர் திருடியதை ஒப்பு கொண்டார். இதையடுத்து மாணவன் லோகேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 பவுன் தங்க சங்கிலி, வெள்ளிக்கொலுசு, செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தர்மபுரி அரசு கலை கல்லூரிக்கு தேர்வு எழுத வந்த மாணவியிடம், அதே கல்லூரியில் படிக்கும் மாணவனே திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்