ஓசூரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 19 பவுன் நகை திருட்டு-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Update: 2022-11-09 18:45 GMT

ஓசூர்:

ஓசூரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 19 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தனியார் நிறுவன மேலாளர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் அருகே உள்ள கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 38). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 5-ந் தேதி இரவு இவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 19 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

போலீசார் விசாரணை

இந்தநிலையில் திருப்பதி கோவிலுக்கு சென்ற ராஜா நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு இருந்ததும், அதில் இருந்த 19 பவுன் நகை திருடப்பட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து அவர் ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓசூரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 19 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்