நல்லம்பள்ளி அருகே பட்டணத்து மாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Update: 2022-10-14 18:45 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே பட்டணத்து மாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பட்டணத்து மாரியம்மன் கோவில்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான்கோட்டையை அடுத்த எட்டியானூர் கிராமத்தில் பட்டணத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கிராமத்துக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளது. இந்தநிலையில் நேற்று காலை கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலுக்கு பூஜை செய்ய வந்த பூசாரி, இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த 5 பவுன் நகை திருடப்பட்டு இருந்தது. மேலும் 2 ஆண்டுகளாக திறக்கப்படாத கோவில் உண்டியலும் மாயமாகி இருந்தது தெரிந்தது.

5 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு

இதுகுறித்து பூசாரி அதியமான்கோட்டை போலீசார் மற்றும் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து கோவிலுக்கு உள்ளே சென்றதும், 5 பவுன் நகையை திருடியதும் தெரியவந்தது.

மேலும் உண்டியலை பெயர்த்து எடுத்ததுடன், அதை உடைத்து ரூ.1 லட்சம் பணத்தை திருடியதும், பின்னர் உண்டியலை கோவில் அருகே வீசி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கோவிலில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பொதுமக்கள் அச்சம்

அதியமான்கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லம்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம், டீ கடை, நகை அடகு கடை, காளியம்மன் கோவில் ஆகிய இடங்களில் திருட்டு சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தற்போது எட்டியானூர் கிராமத்தில் உள்ள பட்டணத்து மாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே போலீசார் கிராம பகுதிகளில் இரவிலும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்