கோவிலின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு

மன்னார்குடி அருகே கோவிலின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-07-03 18:04 GMT

மன்னார்குடி அருகே கோவிலின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

காசிவிஸ்வநாதர் கோவில்

மன்னார்குடி அருகே உள்ள மகாதேவபட்டினம் மேலபேட்டையில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 9-ந் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இங்கு அதே ஊரை சேர்ந்த கண்ணப்பன் (வயது 60) என்பவர் அர்ச்சகராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அர்ச்சகர் கண்ணப்பன் கோவிலை வழக்கம் போல பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

மீண்டும் நேற்று காலை கோவிலுக்கு வந்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து ஊரில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்தார்.

போலீசார் விசாரணை

இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அம்மன் கழுத்தில் கிடந்த 4 கிராம் தங்க சங்கிலி மற்றும் 2 கிராம் எடை கொண்ட 2 சங்கிலிகள் என மொத்தம் ஒரு பவுன் மதிப்புள்ள நகைகளை காணவில்லை. மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பரவாக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த் மற்றும் போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து பரவாக்கோட்டை போலீசில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் நகைகளை திருடிய மர்ம நபர்களை வலைவீசி ேதடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்