அன்னதானப்பட்டி
சேலம் அருகே அரசு பஸ் மோதி இளம்பெண் உடல் நசுங்கி பலியானார். கணவர் கண் எதிரே இந்த சோகம் நிகழ்ந்தது.
சிப்ஸ் வியாபாரம்
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஏரியூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவருடைய மனைவி செண்பகவள்ளி (25). இவர்களுக்கு ரசிகா (7½) என்ற மகளும், தீரன் (4½), ஆதி வருண் (2½) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
கணவன்-மனைவி இருவரும் திருச்சியில் தள்ளுவண்டி கடையில் சிப்ஸ் வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை மணிகண்டன், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் திருச்சியில் இருந்து சேலம் வழியாக பென்னாகரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
பெண் உடல் நசுங்கி பலி
அப்போது கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலம் சர்வீஸ் ரோடு பகுதியில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். பின்னால் கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த செண்பகவள்ளி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவர் கண் எதிரே சோகம்
மணிகண்டன் மற்றும் குழந்தைகள் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் கண் முன்னே மனைவி விபத்தில் பலியான சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.